மாவட்டத்தில் அரசு டாக்டர் குடும்பத்தினர் உள்பட புதிதாக 9 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் அரசு டாக்டர் குடும்பத்தினர் உள்பட புதிதாக 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 July 2020 6:21 AM GMT (Updated: 2020-07-05T11:51:24+05:30)

மாவட்டத்தில் அரசு டாக்டர் குடும்பத்தினர் உள்பட புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய டாக்டர், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் 5 பேருக்கும் சளி, ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசு டாக்டர் உள்பட 6 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து அவர்கள் வசித்து வந்த வீட்டின் முன்பு தடுப்புகள் அமைத்து, நகராட்சி சார்பில் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. காமராஜபுரம் பகுதியில் கஸ்தூரிபாய் மருத்துவமனை தலைமை மருத்துவர் திவ்யா தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் அமைத்து, அப்பகுதி பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், கபசுர குடிநீரும் வழங்கினர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

43 பேருக்கு சிகிச்சை

கொரோனா தொற்று ஏற்பட்ட அரசு டாக்டர் கவுரிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த மருத்துவமனையும் மூடப்பட்டு, சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கரூரை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பள்ளப்பட்டி சுபாஷ் நகரை சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பள்ளப்பட்டி வைசாலி தெருவை சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவருக்கும் நேற்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தற்போது மருத்துவமனையில் மொத்தம் 43 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story