மங்களூரு அருகே மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை சாவு 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்கள் மீட்பு


மங்களூரு அருகே மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை சாவு 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 6 July 2020 4:15 AM IST (Updated: 6 July 2020 12:57 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே, மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

மங்களூரு, 

மங்களூரு அருகே, மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

மண்சரிவு

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெங்களூரு உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த 3 மாவட்டங்களிலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை ஆரம்பித்த மழை நேற்று முன்தினம் இரவு வரை விடிய, விடிய விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்றும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது மங்களூரு தாலுகா குருபுரா அருகே பங்களாகுட்டே பகுதியில் நேற்று மதியம் சரியாக 12.45 மணிக்கு 30 அடி உயரத்தில் இருந்து திடீரென மண்சரிந்து அப்பகுதியில் உள்ள 4 வீடுகள் மீதும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு லாரி, ஆட்டோ மீதும் விழுந்தது. இதில் 4 வீடுகளும், ஆட்டோ, லாரியும் சேதம் அடைந்தன.

மந்திரி வருகை

மண்சரிந்து விழுந்த 4 வீடுகளில் 3 வீடுகளுக்குள் யாரும் இல்லை. ஆனால் ஒரு வீட்டில் இருந்த 16 வயது சிறுவன் சப்வான், அவனது தங்கையான 11 வயது சிறுமி சஹாலா ஆகியோர் மண்சரிவில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் அங்கு வந்த 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீடுகளின் மீது விழுந்த மண்ணை அகற்றும் பணி நடந்தது. மண்சரிவில் சிக்கிய அண்ணன், தங்கையை மீட்பதற்காக அங்கு மீட்பு குழுவினரும் வந்து இருந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் கர்நாடக மீன்வளத்துறை மந்திரியும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான கோட்டா சீனிவாச பூஜாரி, தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யும், மாநில பா.ஜனதா தலைவருமான நளின்குமார் கட்டீல், மங்களூரு எம்.எல்.ஏ. யு.டி.காதர், மாவட்ட கலெக்டர் சிந்து பி.ரூபேஷ் ஆகியோரும் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். மேலும் அப்பகுதியில் வசித்து வந்த 15 குடும்பத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மாலை 4.45 மணிக்கு, மண்சரிவில் சிக்கிய சப்வான், சஹாலா ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுதனர். இந்த காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதன்பின்னர் உயிரிழந்த அண்ணன்-தங்கையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை உயிரிழந்த சம்பவம் மங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் குடகு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மண்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு மங்களூருவில் மண்சரிவில் சிக்கி அண்ணன்-தங்கை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story