கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் 33 மணி நேர ஊரடங்கு அமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்; சாலைகள் வெறிச்சோடின
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 33 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 33 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் ஆதரவு வழங்கி வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் வாகனம், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 3 மாதங்களாக வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து பலர் கர்நாடகத்திற்கு வந்தனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
இதைதொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. 200, 300, 400 என்ற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,200, 1,500 என்ற ரீதியில் அதிகரித்துள்ளது. அதுபோல் பலி எண்ணிக்கையும், பாதிப்பும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
33 மணி நேர முழு ஊரடங்கு
வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கி வரும் கொரோனா வைரஸ் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையும், பல்வேறு துறை அதிகாரிகளையும் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 5-ந் தேதி (அதாவது நேற்று) முதல் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
அதன்படி கர்நாடகத்தில் ஞாயிறு ஊரடங்கு நேற்று தொடங்கியது. வழக்கமான 9 மணி நேர இரவு ஊரடங்குடன் ஞாயிறு ஊரடங்கையும் சேர்த்து மொத்தம் 33 மணி நேர ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கியது.
முழுஊரடங்கு அமலில் இருந்த போதும் அரசு-தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் பலசரக்கு கடைகள், காய்கறி, இறைச்சி கடைகள் எப்போதும் போல் திறந்திருந்தன.
அதே வேளையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ஆட்டோக்கள், டாக்சிகள், தனியார் வாகனங்கள் ஓடவில்லை. வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.
மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
சாலைகளில் வாகனங்கள் ஓடவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில வாகனங்கள் சாலையில் தென்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
ஊரடங்கு அமல்படுத்தினாலும், பொதுமக்கள் அதிகளவில் சாலைகளில் வாகனங்களில் செல்வதை பார்க்க முடியும். ஆனால் தற்போது கொரோனாவுக்கு பயந்து, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
சாலைகள் வெறிச்சோடின
பெங்களூருவில் ஊரடங்கிற்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. பெங்களூருவில் எம்.ஜி.ரோடு., ஜே.சி.ரோடு, கஸ்தூரிபா ரோடு, கப்பன் பார்க் ரோடு, லால்பாக் ரோடு, சில்க்போர்டு சந்திப்பு, ஓசூரு ரோடு உள்பட பரபரப்பாக காணப்படும் சாலைகள், நேற்று வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காட்சி அளித்தன.
மைசூரு, மங்களூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி, பல்லாரி, விஜயாப்புரா, தாவணகெரே, கலபுரகி, யாதகிரி, துமகூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கிற்கு மக்களின் ஆதரவு கிடைத்தது.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் பெங்களூரு உள்பட சில இடங்களில் வாகன ஓட்டிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் ஊரடங்கு நிறைவடைந்தது. அதைதொடர்ந்து பஸ்கள் உள்பட அனைத்து சேவைகளும் வழக்கம் போல் இயங்க தொடங்கின.
Related Tags :
Next Story