கர்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்


கர்நாடகத்தில் முழு ஊரடங்கு: தமிழக வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 5 July 2020 10:30 PM GMT (Updated: 5 July 2020 8:06 PM GMT)

கர்நாடகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழக வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். தடையை மீறி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் தாக்கினர்.

முழு ஊரடங்கு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அந்த மாநில போலீசார், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லைப்பகுதிகளில் கர்நாடக போலீசார், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கர்நாடகத்திற்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் வந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகு ரக வாகனங்களை போலீசார் தடுத்து, மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர். மேலும், ஊரடங்கு தடை உத்தரவை மீறி செல்பவர்கள் மீது கர்நாடக போலீசார் தடியடி நடத்தி, திருப்பி அனுப்பினார்கள்.

வாகன ஓட்டிகள் தவிப்பு

தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு இ-பாஸ் அனுமதி பெற்று செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் என அனைவரும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்புவதால், மாநில எல்லைப்பகுதியில் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் கடைகளும் மூடப்பட்ட நிலையில், உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்காமல் வாகன ஓட்டிகள், வாகனங்களில் பயணம் செய்தவர்கள் தவித்தனர். இதனிடையே, தமிழகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், கன்டெய்னர்கள் உள்ளி்ட்ட சரக்கு வாகனங்கள், வழக்கம்போல் கர்நாடக மாநிலத்திற்கு சென்று வருகின்றன.

Next Story