பட்ஜெட் கால தாமதத்திற்கு கவர்னரே காரணம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


பட்ஜெட் கால தாமதத்திற்கு கவர்னரே காரணம் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 July 2020 4:30 AM IST (Updated: 6 July 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பட்ஜெட் தாக்கல் செய்ய கால தாமதமாவதற்கு கவர்னர் கிரண்பெடியே காரணம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி, 

புதுவை பட்ஜெட் தாக்கல் செய்ய கால தாமதமாவதற்கு கவர்னர் கிரண்பெடியே காரணம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

கடும் நடவடிக்கை

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறையை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு மற்றும் சிகிச்சை சரியில்லை என்று சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

சிகிச்சை பெறுபவர்களிடம் இதுகுறித்து நானே தொலைபேசி மூலம் பேசினேன். அப்போது அவர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். உணவும் தரமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு

தமிழகத்தைப் போல் புதுவையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கூறினார்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது. புதுவையில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். டீக்கடை, பங்கு கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. மாலை வேளைகளில் கூட்டமாக நின்று பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து பரவிய கொரோனா மூலம் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சோலை நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் சிலர் குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா தொற்றை தடுக்க ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி முதல் இந்த சோதனை நடைபெற உள்ளது. அதற்கு பல மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 9 மாதங்கள் வரை பரிசோதனை செய்து அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் சர்ச்சை ஏற்பட் டுள்ளது.

புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சை அளிக்க மையம் அமைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இதுதொடர்பாக தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளோம்.

அரசு காரணமல்ல

புதுவை பட்ஜெட்டுக்கு உள்துறை செயலர் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் உள்துறை அமைச்சரின் ஒப்புதல் கிடைக்கும். அதன் பின்பு பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

கடந்த ஏப்ரல் மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிப்ரவரி மாதத்தில் ஆயத்த நடவடிக்கை எடுத்து கோப்புகளை தயாரித்தோம். அதை கவர்னருக்கு அனுப்பிய போது அதில் பல கேள்விகளை கேட்டு கால தாமதப்படுத்தி திருப்பி அனுப்பினார். அதன் பின்பு நிதித்துறை செயலாளரிடம் பேசி சில மாற்றங்களை செய்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். பட்ஜெட் காலதாமதத்திற்கு அரசு காரணமல்ல. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மத்திய அரசு நமக்கு தரவேண்டிய சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிதி, 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தியதற்கான நிதி, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான நிதி போன்றவற்றை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மத்திய அரசு தரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story