ஊரடங்கு காலத்தில் 15,333 பேருக்கு கொரோனா பரிசோதனை ஜிப்மர் இயக்குனர் தகவல்


ஊரடங்கு காலத்தில் 15,333 பேருக்கு கொரோனா பரிசோதனை ஜிப்மர் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 6 July 2020 3:30 AM IST (Updated: 6 July 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் 15,333 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி, 

ஊரடங்கில் 15,333 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முக்கிய அறுவை சிகிச்சைகள்

ஜிப்மர் மருத்துவமனையில் ஊரடங்கு காலத்திலும் அனைத்துவித அவசர உயிர்காக்கும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் இருந்து முன்பதிவு செய்து வெளிப்புற சேவைகள் அளிக்கப்பட்டு வந்தன. அதன்படி கடந்த 30-ந் தேதி வரை புற்றுநோய், இதயம், மூளைக் கான அறுவை சிகிச்சை என 376 முக்கியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே நோய் கண்டுபிடிக்கப்பட்ட 3,861 புற்றுநோயாளிகளுக்கும், 410 புதிய புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தலா 3 நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ புற்றுநோயியல் துறையில் 800 புற்றுநோயாளிகளுக்கு ரத்த கூறு சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில் 3,351 கதிர்வீச்சு சிகிச்சைகளும், 85 பேருக்கு பிராக்கி தெரப்பியும், 2,574 பேருக்கு கீமோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

உயர் தீவிர சிகிச்சை

கொரோனா அறிகுறியுடன் 1,644 நோயாளிகள் ஊரங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த 15,333 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மட்டும் 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 பேர் ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலிலும் தொற்று நோய் மட்டுமின்றி, அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளிலும் ஜிப்மர் மருத்துவமனை, ஏழை எளியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உயர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story