தமிழகத்தில் முழு ஊரடங்கு புதுச்சேரி கிராமப்புற மக்கள் தவிப்பு


தமிழகத்தில் முழு ஊரடங்கு புதுச்சேரி கிராமப்புற மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 6 July 2020 3:30 AM IST (Updated: 6 July 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டதால் ரெட்டிச்சாவடி போலீசார் தடுத்து நிறுத்தியதால் புதுச்சேரி கிராமப்புற மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

பாகூர், 

தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டதால் ரெட்டிச்சாவடி போலீசார் தடுத்து நிறுத்தியதால் புதுச்சேரி கிராமப்புற மக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

முழு ஊரடங்கு

பூலோக ரீதியில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுடன் புதுச்சேரி பின்னிப்பிணைந்து உள்ளது. பாகூர் பகுதியை சுற்றியுள்ள புதுச்சேரி கிராம மக்கள் தமிழக பகுதியான ரெட்டிச்சாவடியை கடந்து தான் நகர பகுதிக்கு செல்ல வேண்டும். இதேபோல் திருபுவனை, திருவண்டார்கோவில் செல்ல தமிழக பகுதியான கண்டமங்கலத்தை தாண்டி தான் செல்லவேண்டும்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. ஆனால் புதுவை மாநிலத்தில் வழக்கம்போல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரிய அளவில் கெடுபிடி இல்லை.

போலீசார் தடுத்து நிறுத்தினர்

இந்தநிலையில் பாகூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் புதுவைக்கு இரு சக்கர வாகனங்களில் வந்த போது ரெட்டிச்சாவடி போலீசார் தடுத்து நிறுத்தி முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் எங்கும் செல்லக்கூடாது என்று திருப்பி அனுப்பினர். இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அனுமதி மறுத்ததால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர்.

இதேபோல் புதுவை நகர பகுதியில் இருந்து பாகூர் கிராமப்புறங்களுக்கு சென்றவர்களும் ரெட்டிச்சாவடி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

அடுத்து வரும் முழு ஊரடங்கு நாட்களில் இதுபோன்று பிரச்சினை ஏற்படாமல் இருக்க புதுச்சேரி அரசு கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் பேசி, எல்லை பகுதியில் இருப்பவர்கள் தடையின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story