12 எம்.எல்.சி.க்கள் நியமன பிரச்சினையை கைவிட்டு கொரோனா நோயாளிகள் பற்றி சஞ்சய் ராவத் கவலைப்பட வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு


12 எம்.எல்.சி.க்கள் நியமன பிரச்சினையை கைவிட்டு கொரோனா நோயாளிகள் பற்றி சஞ்சய் ராவத் கவலைப்பட வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தாக்கு
x
தினத்தந்தி 6 July 2020 4:00 AM IST (Updated: 6 July 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் குறித்து சஞ்சய் ராவத் கவலைப்பட வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

மேல்சபையில் கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் 12 எம்.எல்.சி.க்களை நியமிப்பது குறித்து கவலைப்படாமல் கொரோனா நோயாளிகள் குறித்து சஞ்சய் ராவத் கவலைப்பட வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

12 எம்.எல்.சி. பதவி

மராட்டிய மேல்சபையில் கவர்னர் ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட 12 எம்.எல்.சி.க்களின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் புதிய எம்.எல்.சி.க்களை நியமனம் செய்வதில் கவர்னர் காலதாமதம் செய்து வருவதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக நேற்று அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் அதன் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ராவத், கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் எம்.எல்.சி.க்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சி (பா.ஜனதா) விரும்பவில்லை. அக்டோபர் மாதம் (சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்து) புதிய அரசாங்கம் அமைந்த பிறகு கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எம்.எல்.சி.க்களை நியமிக்கலாம் என்ற யூகங்கள் உள்ளன. இது வெறும் கனவு தான். ஏனெனில் இந்த அரசாங்கம் வலுவாக உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

நோயாளிகள் பற்றி கவலைப்பட வேண்டும்

இதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்து உள்ளார். உல்லாஸ்நகரில் கொரோனா சிகிச்சை வசதிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இப்போது 12 எம்.எல்.சி.க்களை நியமிப்பது தொடர்பாக சஞ்சய் ராவத் கவலைப்படக் கூடாது. அந்த பிரச்சினையை கைவிட்டு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பற்றி அவர் கவலைப்பட வேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து கல்யாண்- டோம்பிவிலி மாநகராட்சி பகுதியில் சிகிச்சை வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “கல்யாண்- டோம்பிவிலியில் கொரோனா பரவல் நிலைமை மோசமடைந்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஐ.சி.யூ. படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற தேவையான மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Next Story