குலசேகரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரம் விழுந்து 3 வீடுகள், 6 கடைகள் சேதம் இருளில் மூழ்கிய கிராமம்
குலசேகரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் பழமையான அரச மரம் முறிந்து விழுந்து 3 வீடுகள், 6 கடைகள் சேதமடைந்தன.
குலசேகரம்,
குலசேகரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் பழமையான அரச மரம் முறிந்து விழுந்து 3 வீடுகள், 6 கடைகள் சேதமடைந்தன. மின்கம்பிகள் அறுந்ததால் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியது.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன.
குலசேகரம் அருகே திருநந்திக்கரை பாலம் சந்திப்பில் சாலையோரமாக சுமார் 150 ஆண்டுகள் பழமையான அரச மரம் உள்ளது. இந்த மரத்தையொட்டி வீடுகள், கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீசிய சூறைக்காற்றில் அரச மரம் முறிந்து அருகில் இருந்த வீடுகள், கடைகள் மீது விழுந்தது. இதில் ஜூடின்கனி (வயது 45), சுதன்(32), ஹரிதாஸ் ஆகியோரின் வீடுகள், 6 கடைகள் சேதம் அடைந்தன.
மரம் முறிந்த போது ஜூடின்கனி தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். மரக்கிளை விழும் சத்தம் கேட்டதும் அவர்கள் வீட்டின் பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடினர். இதனால், அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுபோல், பக்கத்து வீட்டை சேர்ந்த சுதன் என்பவர் தனது மனைவி ரம்யா (24) மற்றும் 1½ வயது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். மரம் விழுந்த சத்தம் கேட்டதும், அவர்கள் வீட்டின் வெளியே ஓடினர். இதுபோல், ஹரிதாஸ் குடும்பத்தினரும் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினர். இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மின்தடை
மரம் முறிந்து விழுந்ததில் 6 மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் அறுந்தன. இதனால், மின்தடை ஏற்பட்டு திருநந்திக்கரை கிராமம் இருளில் மூழ்கியது. இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் சென்று மின் இணைப்பை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் மரம் முறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரண தொகை பெற்றுத்தருவதாக ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story