துடியலூரில் ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம் பெண் குழந்தை பிறந்தது
துடியலூரில் ஆட்டோவில் பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
கோவை,
கோவை துடியலூர் அருகிலுள்ள ராக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி குமாரி (21). கர்ப்பமாக இருந்த அவர், கோவை அரசு ஆஸ்பத்திரி யில் பரிசோதனை செய்து வந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள், செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஜோதிகுமாரியை ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்டோவில் பிரசவம்
ராக்கிபாளையத்தில் இருந்து துடியலூர் நோக்கி ஆட்டோ வந்து கொண்டு இருந்தது. அங்குள்ள தொப்பம்பட்டி பிரிவில் அவர்கள் வந்தபோது, ஜோதிகுமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் துடித்தார். இதையடுத்து செல்வம், ஆட்டோவை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.
அப்போது ஆட்டோவுக்குள்ளேயே ஜோதிகுமாரிக்கு பிரசவம் ஆனது. அவருக்கு கணவர் கவுதம் உதவி செய்தார். இதில் ஜோதிகுமாரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
தாய்-சேய் நலம்
திடீரென்று நள்ளிரவில் ஒருவர் குழந்தையுடன் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததால் அங்கிருந்த நர்சுகள் சிறிது நேரம் அச்சமடைந்தனர். பின்னர் கவுதம் நடந்ததை கூறியதை தொடர்ந்து அங்கு ஜோதிகுமாரிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
Related Tags :
Next Story