பண்ருட்டியில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்


பண்ருட்டியில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்
x
தினத்தந்தி 6 July 2020 5:00 AM IST (Updated: 6 July 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

பண்ருட்டி,

பண்ருட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

நடத்தையில் சந்தகம்

பண்ருட்டி திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார்(வயது 31). சிற்ப கலைஞர். இவரது மனைவி சரண்யா(24). இந்த தம்பதிக்கு விக்னேஷ்(5), தினேஷ்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

சிவக்குமார் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களாக சரண்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சரண்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சிவக்குமார், நடத்தையில் சந்தேகப்பட்டு சரண்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் மனமுடைந்த சரண்யா சேலையால் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சரண்யா இறந்து விட்டதாக கூறினர். இது பற்றி அறிந்ததும் வீட்டில் இருந்த சிவக்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலையும், ஆஸ்பத்திரியில் இருந்த சரண்யாவின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டதால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story