வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2020 4:30 AM IST (Updated: 6 July 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெய்வேலி,

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்களை மீட்க வேண்டும்

கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பிழைக்க சென்ற தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இணைய வழியில் ஒன்றிணைந்து அவரவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விமானம் மூலம் மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தனி நல அமைச்சகம்

பின்னர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனாவால் வேலை இழந்து உண்ண உணவு இன்றி, தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை விமான கட்டணம் பெறாமல் தமிழக அரசின் சொந்த செலவில் அழைத்து வரவேண்டும். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தனி நல அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும், தனி நல வாரியமும் அமைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் தமிழ்தேசிய அமைப்புகளும் இணைந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர்

இதேபோல் கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி பதாகைகளை ஏந்தி நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட தமிழர் படை பாலச்சந்தர், நகர இளைஞரணி செயலாளர் ரத்தினம், இளைஞரணி நிர்வாகிகள் சுந்தர், சுரேஷ், ராமன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் அருகே பூண்டியாங்குப்பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.

திட்டக்குடி

திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மங்களூர் ஒன்றிய செயலாளர் ரெங்க சுரேந்தர் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் வெளிநாடுகளில் உயிரை இழந்தும், வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வரும் தமிழர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழர்களுக்கு தனி நலவாரியம் மற்றும் தனி நல அமைச்சகம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story