ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 26 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 248 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.
26 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்தது. இதில் 162 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று புதிதாக பாதிக்கப்பட்டதில், ஈரோடு மாநகராட்சியில் 4 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 15 பேரும், கொடுமுடியில் 2 பேரும், பவானிசாகரில் ஒருவரும், தாளவாடியில் ஒருவரும், சத்தியமங்கலத்தில் 2 பேரும், பவானியில் ஒருவரும் உள்ளனர்.
குழந்தைகள்
குழந்தைகள், சிறுவர்-சிறுமிகளையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. கொடுமுடியில் ஒரு வயது பெண் குழந்தைக்கும், ஈரோடு மோசிக்கீரனார் வீதியில் 5 வயது ஆண் குழந்தைக்கும், கோபிசெட்டிபாளையத்தில் 3 வயது ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஈரோடு திண்டலில் 7 வயது சிறுமியையும், கோபியில் 8 வயது சிறுவனையும் கொரோனா தாக்கியது.
2-வது கட்டமாக மாவட்டத்தில் பரவ தொடங்கிய வைரஸ் தொற்று முதலில் ஈரோடு மாநகராட்சி பகுதியை ஆட்டிப்படைக்க முயன்றது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக தொற்று பரவுதல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மலைக்கிராமம்
அதேசமயம் கோபிசெட்டிபாளையத்தில் நாளுக்கு நாள் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கும் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மலைக்கிராம பகுதியான தாளவாடியிலும் முதியவர் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அங்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைக்காக ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story