முழு ஊரடங்கு: கடைகள் அடைக்கப்பட்டன; சாலைகள் வெறிச்சோடியது சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ்
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இதன் தாக்கம் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முதன் முதலில் கடந்த மார்ச் மாதம் 21-ம்தேதி ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் பொது ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. எனினும் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
முழு ஊரடங்கு
இதனால் இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு ஈரோடு மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் கடைகள், கனி ஜவுளி மார்க்கெட் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள், பெட்ரோல் பங்க் இயங்கவில்லை. இதேபோல் ஈரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட், உழவர் சந்தையும் இயங்கவில்லை.
எச்சரிக்கை
மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகள் மற்றும் மளிகை கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள், பேக்கரிகள், காய்கறி சந்தைகள், வாரச்சந்தைகள், உழவர் சந்தைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன.
அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. இந்த முழு ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், தடையை மீறி யாரேனும் வெளியில் சுற்றித்திரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்வதோடு அவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரித்து இருந்தார்.
வெறிச்சோடியது
இதனால் நேற்று காலை முதலே ஈரோட்டில் அனைத்து முக்கிய வீதிகளும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் பொது போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு இருந்ததால், ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பூங்கா பகுதி, சூரம்பட்டி நால்ரோடு, காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம், சுவஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், ஆர்.கே.வி. ரோடு, கடை வீதிகள், ஈஸ்வரன் கோவில் வீதி, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதி, மேம்பாலம் போன்றவற்றில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கின்போது தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே முக்கியமான பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வீட்டுக்குள் முடக்கம்
அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய சிலரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியான கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி சோதனைச்சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி, அம்மாபேட்டை, பவானி போன்ற சோதனைச்சாவடிகளில் போலீசார் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன. பிற வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதைப்போல் கோபி, பவானிசாகர், பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இதேபோல் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, சென்னிமலை, அந்தியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story