சத்தியமங்கலத்தில் காகித ஆலை மேலாளர்- நகராட்சி ஊழியருக்கு கொரோனா தாளவாடியில் தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது
சத்தியமங்கலத்தில் காகித ஆலை மேலாளர் மற்றும் நகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு,
சத்தியமங்கலத்தில் காகித ஆலை மேலாளர் மற்றும் நகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் தாளவாடியில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரியும் மூடப்பட்டது.
கொரோனா 2-வது அலை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வீசிவருகிறது. இதன்காரணமாக கொரோனா பாதிப்பு தினமும் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு, மொடக்குறிச்சி, சித்தோடு, கோபியை தொடர்ந்து சத்தியமங்கலத்திலும் கொரோனா தன் கால்களை பதித்து உள்ளது. தற்போது அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நகராட்சி ஊழியர்
சத்தியமங்கலம் நகராட்சியில் திம்மையன்புரத்தை சேர்ந்த ஒருவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் நகராட்சி ஊழியர் வசித்த திம்மையன்புதூரில் 3 வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அங்குள்ள 44 குடும்பங்களை சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் நகராட்சியில் பணியாற்றி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள ஊழியர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
மேலும் நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நகராட்சி அலுவலகமும் மூடப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காகித ஆலை மேலாளர்
இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள காகித ஆலையில் 55 வயது உடைய ஆண் ஒருவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 120 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
தாளவாடி
தாளவாடியை அடுத்த மெட்டல்வாடி பகுதியை சேர்ந்த 63 வயது முதியவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு இருந்து உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தாளவாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனே இதுகுறித்து தாளவாடி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் முதியவருக்கு சிகிச்சை அளித்த தாளவாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த தனியார் மருத்துவமனையை மூட உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து முதியவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த 53 வயது ஆண் மற்றும் அவருடைய 52 வயது மனைவி, 30 வயது மகன் ஆகியோர் சென்னையில் இருந்து கடந்த 3-ந் தேதி ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 53 வயது ஆணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மனைவிக்கும், மகனும் எந்தவித பாதிப்பும் இல்லை.
எனினும் அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story