மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை கடைபிடித்த பொதுமக்கள் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின


மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை கடைபிடித்த பொதுமக்கள் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 6 July 2020 6:07 AM IST (Updated: 6 July 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்தனர். இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடித்தனர். இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த முழு ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர். வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.

தர்மபுரி நகரம்

மாவட்டத்தின் தலைநகரான தர்மபுரி நகரில் முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடித்தனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். காலை நேரத்தில் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். தர்மபுரி நகரில் பஸ் நிலையங்களை சுற்றி உள்ள சாலைகளான ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமிநாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, ராஜகோபால் கவுண்டர் தெரு, நாச்சியப்பகவுண்டர் தெரு மற்றும் 4 ரோடு, நேதாஜி பைபாஸ்ரோடு, கடைவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

இந்த முழு ஊரடங்கால் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது. நகரில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடந்தன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதே போன்று பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஏரியூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், நல்லம்பள்ளி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து இன்றி அனைத்து கிராம சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.

Next Story