புழல் சிறையில் வேகமாக பரவுகிறது: மேலும் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா உறுதி - கைதிகள் பீதி
புழல் சிறையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. மேலும் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கைதிகள் பீதி அடைந்துள்ளனர்.
செங்குன்றம்,
புழல் விசாரணை சிறையில் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் சிறை வார்டர்கள், சிறை போலீசார் என 10-க்கும் மேற்பட்டோருக்கும் என 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று புழல் சிறையில் பணியாற்றும் 44 வயது, 28 வயது மற்றும் 23 வயது உடைய மேலும் 3 சிறை போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேரும் புழல் சிறை குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புழல் சிறையில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி பெரிய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தவிர சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை புழல் சிறையில் அடைப்பது கிடையாது. முன்னதாக சிறு சிறு குற்றங்களை செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த மே மாதம் தமிழக அரசு சார்பில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் உள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் வந்து பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தற்போது புழல் சிறையில் உள்ள கைதிகள், வெளிநாட்டு கைதிகள், சிறை போலீஸ்காரர்களுக்கு கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் புழல் சிறையில் உள்ள மற்ற கைதிகள் பீதியில் உள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர நடவடிக்கை எடுத்தால்தான் சிறையில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கலாம் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story