செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்


செய்யூர் அருகே, இளம்பெண் மர்ம சாவில் போலீசில் உறவினர் சரண்
x

செய்யூர் அருகே இளம்பெண் மர்ம சாவில் போலீசில் புகார் கூறப்பட்ட அவரது உறவினர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தாம்பரம், 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண், கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்த மறுநாள், தன்னுடைய தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக இளம்பெண்ணின் சகோதரர், செய்யூர் போலீஸ் நிலையத்தில் தனது உறவினர்களான புருஷோத்தமன் (25), தேவேந்திரன் ஆகியோர் மீது புகார் செய்தார்.

மேலும் அந்த புகாரில், எனது தங்கை குளிக்கும்போது அதை உறவினரின் மகன்களான இவர்கள் இருவரும் செல்போனில் வீடியோ எடுத்து 5 ஆண்டுகளாக எனது தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தங்களுக்கு தெரியாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.

மேலும் புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தனது தங்கையின் உடல் புதைக்கப்பட்ட சுடுகாட்டில் அமர்ந்து அவர் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்த நிலையில் புகார் கூறப்பட்ட புருஷோத்தமன், துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவர், செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரையிடம் புருஷோத்தமனை ஒப்படைத்தார்.

போலீசார் புருஷோத்தமனை மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருமால் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தி.மு.க. நிர்வாகிகளான புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story