சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? - போலீஸ் கமிஷனர் விளக்கம்
சென்னையில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? என்பதற்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்தார்.
சென்னை,
சென்னையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி போலீசாரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை அமைந்தகரை அண்ணா வளைவு அருகே நடந்த வாகன சோதனை ஏற்பாடுகளை பார்வையிட்டு, சில ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாளை முதல் (இன்று) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வரும்போதும், பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் சுற்றக்கூடாது. கூட்டமாக கூடக்கூடாது. அவசியம் இல்லாமல் மார்க்கெட்டுக்கு வரக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வியாபாரிகளுடன் துணை கமிஷனர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளனர். வியாபாரிகள் அதை பின்பற்றி நடக்க வேண்டும்.
மாதவரம் பழ மார்க்கெட், காசிமேடு மீன் மார்க்கெட், சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும் என்பது பற்றி போலீசார் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள்.
உரிய விதிமுறைகளை பின்பற்றி நடக்காத வியாபாரிகளை மாநராட்சி பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். விதிமுறையை பின்பற்றி நடக்காத வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். அவர்களது கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 87 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனப்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை பொறுத்தவரை அவர்களை முழுமையாக தடை செய்ய முடியாது. அதே நேரத்தில் அவர்களை முழுமையாக அனுமதிக்கவும் முடியாது. சமூக காவல்பணி அமைப்பு என்ற திட்டப்படி அவர்களை ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்று அழைக்கலாம் அல்லது அவர்களை தன்னார்வ தொண்டர்கள் என்று சொல்லலாம்.
அந்தந்த பகுதியில் உள்ள வியாபார அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள். அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு போலீசாருக்கு உதவி செய்வார்கள். விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உதவுவார்கள். வாகன சோதனையின்போது அவர்கள் போலீசாருடன் இருந்து உதவி செய்வார்கள். அவர்கள் போலீசாருடன் ரோந்து சுற்றிவர இயலாது. போலீசாருக்கான அதிகாரம் அவர்களுக்கு கிடையாது. நன்னடத்தை உள்ளவர்கள் மட்டும் அதில் சேர்ந்து செயல்பட முடியும். ஏதாவது புகார் உள்ளவர்கள் அதில் சேர முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர்கள் ஜெயகவுரி, லட்சுமி, துணை கமிஷனர்கள் அசோக்குமார், சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில், ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை பொறுத்தவரை ‘பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்புக்கு தடை இல்லை என்றும், கட்டுப்பாடுகளுடன் அந்த அமைப்பு செயல்படும் என்பதும் போலீஸ் கமிஷனரின் பேட்டி மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story