திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: அனைத்து கடைகளும் மூடப்பட்டன வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின


திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு:  அனைத்து கடைகளும் மூடப்பட்டன   வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 6 July 2020 8:51 AM IST (Updated: 6 July 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் ஓடாததால் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர், 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கைமற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதில் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக 4 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்ட ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

தற்போது இந்தியா முழுவதும் 6-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட சில தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு குறையாத காரணத்தினால் இந்த மாதத்தில் உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் இருக்காது என்பதால், நேற்று முன்தினமே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சந்தை வெறிச்சோடியது

முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதுபோல் காய்கறி மற்றும் மளிகை கடைகளும் திருப்பூர் மாநகர பகுதிகளில் மூடப்பட்டிருந்தன. திருப்பூரில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். நேற்று இந்த கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், சிலர் நேற்று முன்தினம் இரவே இறைச்சி வகைகளையும், மது வகைகளையும் வாங்கி இருப்பு வைத்திருந்தனர். மீன் மற்றும் இறைச்சி, காய்கறி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் பூட்டப்பட்டு கிடந்தன.

இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, சேவூர், பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், பெருமாநல்லூர், வீரபாண்டி, மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.போலீசார் ஆங்காங்கே விதிகளை பின்பற்றும் வகையில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் எச்சரிக்கை

இதுபோல் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலையில் இருந்தே மாநகர் பகுதி பரபரப்பாக இயங்கும். வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அனைத்து கடைகளிலும் பொருட்கள் விற்பனை அமோகமாக இருக்கும். முழு ஊரடங்கினால் திருப்பூர் குமரன் சாலை, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.

போலீசாரும் பல்வேறு பகுதிகளில் ரோந்து சுற்றி வந்தனர். முழு ஊரடங்கையும் மீறி கடை திறந்தவர்களை கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர். மேலும், போலீஸ் வாகனத்தில் ரோந்து சுற்றியும் வந்தனர். மாநகராட்சி சிக்னல் பகுதியில் தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களையும் எச்சரித்து வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். சிலர் மீது வழக்குபதிவு செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநகர பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே இரவு வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

வாகன போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற கார்த்திகேயன் நேற்று முழு ஊரடங்கு குறித்து மாநகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசாரிடம் பொதுமக்கள் வெளியே வரும் போது உரிய விசாரணை நடத்தி, அதன் பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான தேவைகளுக்காக வெளியே செல்கிறவர்களை தடுக்க கூடாது என்பது உள்பட அறிவுரைகளையும் வழங்கினார்.

களையிழந்த காதர்பேட்டை

திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டையில் வழக்கமாக மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் தான் விற்பனை அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பனியன் நிறுவன தொழிலாளர்கள் விடுமுறை தினம் என்பதால், குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்கி செல்வார்கள். இதுபோல் தற்காலிக கடைகளும் நஞ்சப்பா பள்ளி அருகே பல அமைக்கப்பட்டிருக்கும். இங்கும் ஆடை விற்பனை களை கட்டும்.

இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டதால், காதர்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டன. தற்காலிக கடைகளும் அமைக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் காதர்பேட்டை நேற்று களையிழந்து காணப்பட்டது.

Next Story