சங்கிலி தொடர்போல் பரவும் கொரோனா: ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 350 ஆக உயர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கிலி தொடர்போல் கொரோனா பரவி வருகிறது. ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 350 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. அதன்பிறகு ஒன்றிரண்டு என விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தொற்று பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது.
வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று இருந்த நிலை மாறி, அவர்களிடம் தொடர்பு வைத்தவர்கள் மற்றும் அவர்கள் மூலமாகவும் சங்கிலி தொடர்போல் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது.
350 ஆக உயர்வு
இதில் புதுக்கோட்டை வடக்கு பிரதான வீதியை சேர்ந்த 24 வயது பெண், கணேஷ்நகரை சேர்ந்த 55 வயது ஆண், அசோக்நகரை சேர்ந்த 2 வயது சிறுவன், திருவப்பூரை சேர்ந்த 19 வயது சிறுவன், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மின்சார பராமரிப்பு பணி உதவி என்ஜினீயரான 30 வயது ஆண், காமராஜபுரத்தை சேர்ந்த 30 வயது ஆண், பொது வினியோக திட்ட ரேஷன் கடை அதிகாரி ஒருவர் உள்பட 56 பேரின் பெயர்கள் நேற்று வெளியான பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முச்சதத்தை கடந்து 350 ஆக உயர்ந்துள்ளது.
ஆவுடையார்கோவில் தாலுகாவில் 19 பேர்
ஆவுடையார்கோவில் பகுதியில் திருப்புனவாசலில் 3 பேருக்கும், பில்லுக்குடியில் 3 பேருக்கும், முத்துகுடாவில் ஒருவருக்கும், பொய்யாதநல்லூரில் 2 பேருக்கும், கலபத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே முத்துகுடாவில் 3 பேர், பொய்யாதநல்லூரில் 3 பேர், குளத்தூரில் ஒருவர், ஏம்பலில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது வரை ஆவுடையார்கோவில் தாலுகாவில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஏம்பலை சேர்ந்த 2 பேர் மட்டும் குணமடைந்து விட்டனர் என்று ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங் தெரிவித்தார்.
பெற்றோருக்கும் தொற்று
திருமயம் ஊராட்சி மணவாளன்கரை பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தவரின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து மணவாளன்கரை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை திருமயம் பகுதியில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Related Tags :
Next Story