முழு ஊரடங்கு: வீட்டை விட்டு வெளியே வராத பொதுமக்கள் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புதுக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலானது. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
புதுக்கோட்டை நகரில் கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. தினசரி காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகள் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளும் மூடப்பட்டிருந்தன.
வெறிச்சோடிய சாலைகள்
பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது.
பொதுமக்கள் பலர் பீதியில் வீட்டை விட்டு நகரவில்லை. ஆட்டோ உள்பட எந்த வாகனங்களும் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் போலீசார் ஆங்காங்கே நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்த ஒரு சிலரை பிடித்து எச்சரித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தனர்.
அறந்தாங்கி, ஆலங்குடி
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் முக்கிய வீதிகளான பட்டுக்கோட்டை சாலை, பெரியகடை வீதி, புதுக்கோட்டை சாலை, பேராவூரணி சாலை, கட்டுமாவடி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
ஆலங்குடி பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன. பால் பூத் மற்றும் மருந்து கடைகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல பால் பூத்களும், சில மருந்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் முழு ஊரடங்கையொட்டி நேற்று காரணம் இல்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும், மீறி வந்தால் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்து தண்டோரா போடப்பட்டது.
பொன்னமராவதி, அன்னவாசல்
பொன்னமராவதி பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் நிலையம், அண்ணா சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன. இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் அத்தியாவசிய தேவையான ஒரு சில மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகள், கடைவீதிகள், பஸ் நிலைய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் சுற்றுவட்டார கிராம பகுதிகளான மலைக்குடிப்பட்டி, வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, கடம்பராயன்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், புதூர், கீழக்குறிச்சி, கூத்தினிப்பட்டி, மாங்குடி உள்பட பல பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
ஆவுடையார்கோவில், திருவரங்குளம், கந்தர்வகோட்டை
ஆவுடையார்கோவிலில் மருந்து கடை, பால் கடை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. திருவரங்குளம் கடைவீதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மேட்டுப்பட்டி, வம்பன் நாலு ரோடு, கைக்குறிச்சி, தோப்புக்கொல்லை, கேட்பரை பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பூவரசகுடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கந்தர்வகோட்டையில் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் குவிந்திருப்பார்கள். ஆனால் நேற்று இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அசைவ பிரியர்கள் இறைச்சி வகைகள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
காய்கறிகள் தேக்கம்
கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மறமடக்கி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அந்தந்த கிராம மக்களே இணைந்து பகுதி நேர ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் இப்பகுதியில் விளையும் காய்கறி, பழங்களும் வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தன.
அரிமளம், கீரனூர்
அரிமளம் ஒன்றியத்தில் அரிமளம், கே.புதுப்பட்டி, ஏம்பல், கீழாநிலைக்கோட்டை, ராயவரம், நமணசமுத்திரம், கல்லூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீன் மற்றும் இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன. தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் செயல்படவில்லை. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்கள் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர். சிலர் வீட்டில் உள்ள உடைந்த பொருட்களை சரி செய்வது, வர்ணம் தீட்டுவது, மின்சாதன பொருட்களை பழுது நீக்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டதை காணமுடிந்தது. சில இடங்களில் மருந்து கடை மற்றும் பால் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பழங்கள் மற்றும் பூக்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.கீரனூர் பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story