முழு ஊரடங்கு: கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைப்பு பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் கடைகள்-வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
கரூர்,
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று எந்தவிதமான தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நேற்று கரூர் பகுதியில் மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன.
மேலும் அனைத்து ஓட்டல்கள், துணி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், விற்பனையகங்கள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள், அலங்கார பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் முழுமையான ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுஆதரவு கொடுத்து வீட்டிலையே முடங்கினர்.
சாலைகள் வெறிச்சோடின
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு, வடக்கு பிரசட்சணம்ரோடு, 80 அடி சாலை, செங்கந்தபுரம், காமராஜபுரம், காந்திகிராமம், தாந்தோணிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன. மேலும் கரூர் கோவை ரோடு, திருச்சி, திண்டுக்கல் ரோடு, மதுரைசேலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் ஆம்புலன்சுகள், சரக்கு வாகனங்கள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் தவிர்த்து, வேறு எந்த வாகனங்களும் சாலைகளில் செல்லவில்லை. முறையான இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்த வாகனங்களை போலீசார் மூலை, முடுக்குகளில் நின்று கொண்டு மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் கரூர் பஸ்நிலையம் அருகில் உள்ள மனோகராகார்னர், சுங்ககேட், திருமாநிலையூர், சர்ச்கார்னர் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து, ஊரடங்கை மீறி நடமாடும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.
குளித்தலை-அரவக்குறிச்சி
இதேபோல குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம், வெள்ளியணை, நொய்யல், வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, க.பரமத்தி, சின்னதாராபுரம், நச்சலூர், லாலாபேட்டை, தோகைமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அனைத்து மளிகை கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து யாரேனும் இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்கு உள்ளே வருகின்றார்களா? அல்லது தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிகின்றனரா? என போலீசார் கண்காணித்தனர்.
Related Tags :
Next Story