திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்ய விவசாயிகள் 2 நாட்கள் காத்திருப்பு சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனை செய்வதற்காக 2 நாட்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் சாலைகளில் பருத்தி ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் உரிய விலை கிடைத்ததால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 29 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்வதற்கு வசதியாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மூங்கில்குடி ஆகிய 4 இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்திக்கு கிலோ 52 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரை மத்திய அரசு விலைநிர்ணயம் செய்துள்ளது.
விவசாயிகள் காத்திருப்பு
கொரோனா ஊரடங்கினால் கடந்த 3 மாத காலமாக பஞ்சாலைகள், நூற்பாலைகள் இயங்கவில்லை. இதனால் தனியார் ஆலைகள் மற்றும் வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்திட ஆர்வம் காட்டாததால் விலை குறைந்து வருகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்திய பருத்தி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நிலையில் உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
இதனால் கடந்த 4 வாரமாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக விவசாயிகள் பருத்தியுடன் காத்திருந்து வருகின்றனர். தற்போது வருகிற 9-ந்தேதி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வாகனங்களில் பருத்தியை ஏற்றி கொண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் காத்திருந்தனர்.
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
இதனால் திருவாரூர் பை-பாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பருத்தியை குடோனில் இறக்கி வைக்க இடவசதி இல்லாததால் திறந்த வெளியில் பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து பருத்தியை ஏற்றி வந்த வாகனங்கள் வந்த வண்ணம் இருந்ததால் திருவாரூர்-நாகை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.
நேற்று முழு ஊரடங்கினால் கடைகள் அடைக்கப்பட்டதால் விவசாயிகள் உணவுக்கு வழியின்றி சிரமப்பட்டனர். ஆனாலும் அறுவடை செய்த பருத்திக்கு உரிய விலை கிடைக்கும் நம்பிக்கையில் காத்திருந்தனர்.
Related Tags :
Next Story