சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்


சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்
x
தினத்தந்தி 7 July 2020 4:00 AM IST (Updated: 6 July 2020 11:05 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

ஜி.கே.வாசன் ஆறுதல்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டு இறந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேற்று மதியம் சாத்தான்குளத்துக்கு வந்தார்.

அவர், சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீதி கிடைக்க துணை நிற்போம்

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் அநாகரிகமானது. இது அனைவரையும் வேதனை அடையவும், வெட்கி தலைகுனியவும் செய்துள்ளது. இவர்களது குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதற்கு நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வேதனைக்கு மருந்தாக உள்ளது.

தமிழக அரசு நடுநிலையுடன் செயல்படுகிறது. தந்தை-மகன் கொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறப்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விசாரணை சரியான பாதையில் செல்கிறது. இதனால் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்துக்கு நீதி கிடைக்கும். இதற்கு நாங்கள் துணை நிற்போம்.

புதிய கொள்கை

நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால்தான், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில் உள்ளனர்.

ஒரு சில அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, இந்த சம்பவம் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், காவல் துறையின் மற்றொரு பிரிவான சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இனிவரும் காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அரசு குழு அமைத்து, புதிய கொள்கை கோட்பாடுகளை உருவாக்கி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது த.மா.கா. தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பலர் உடன் இருந்தனர்.

Next Story