சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் உரிமையாளர் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜர்


சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் உரிமையாளர் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜர்
x
தினத்தந்தி 7 July 2020 4:30 AM IST (Updated: 6 July 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் உரிமையாளர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு நேற்று ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தார்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் உரிமையாளர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு நேற்று ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தார்.

தந்தை, மகன் சாவு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஒரு காரில் தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டான் சோதனை சாவடியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கார் பறிமுதல்

அவர் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர். மேலும் அந்த கார் குறித்த விவரங்கள் செய்தியாக வெளியானது.

இதனை பார்த்த கார் உரிமையாளரான சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அமைப்புசாரா பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் என்பவர், போலீசில் பிடிபட்ட கார் தன்னுடையது என்று போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுரேஷ்குமாரை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.

கார் உரிமையாளர் ஆஜர்

அதன்பேரில், சுரேஷ்குமார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் காலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது, சுரேஷ்குமார் காருக்கான ஆவணங்கள், தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சமர்ப்பித்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை அனுப்பி வைத்து, காரையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆவணங்கள் சமர்ப்பிப்பு

இதுகுறித்து கார் உரிமையாளர் சுரேஷ்குமார் கூறும்போது, “நான் 2017-ம் ஆண்டு கார் வாங்கினேன். அந்த காரை சென்னையில் இருந்த கணேசபாண்டியன் என்பவரிடம் குத்தகை அடிப்படையில் இயக்குவதற்கு வழங்கி இருந்தேன். சில ஆண்டுகளுக்கு பிறகு கணேசபாண்டியன் நெல்லைக்கு வந்து விட்டார். அதன்பிறகு தொடர்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது தொலைக்காட்சிகளில் காரை பார்த்த பிறகுதான் எனது கார் என்பது தெரியவந்தது. அதன் பேரில் போலீசுக்கு தகவல் கொடுத்தேன்.

ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்கள். அதன்பேரில் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தேன். அதனை ஆய்வு செய்த போலீசார், கங்கை கொண்டான் போலீசாரை தொடர்பு கொண்டு காரை விடுவிக்க அறிவுறுத்தினர். என்னிடம் காரை எடுத்து செல்லுமாறு கூறினர். அதன்பேரில் நான் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்துக்கு சென்று காரை எடுக்க செல்கிறேன்“ என்றார்.

சுரேஷ்குமார் காரை பயன்படுத்தி தப்பிச்செல்ல இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story