வீட்டிலிருந்து வெளியே வரும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தல்


வீட்டிலிருந்து வெளியே வரும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 July 2020 11:30 PM GMT (Updated: 6 July 2020 5:59 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டிலிருந்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வருவதுடன், கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வீட்டிலிருந்து அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வருவதுடன், கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தி உள்ளார்.

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரம்

தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான நபர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முககவசம் கட்டாயம்

பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியில் வரும்போது கட்டாயமாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகராட்சி நகர் நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story