ஐகிரவுண்டில் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் மூடப்பட்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாவிட்டாலும் பல்வேறு தரப்பினர் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு கட்சி கொடிகளுடன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கொண்டிருக்கும் ஆயுள் சிறை வாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால், பொருளாளர் சாந்திநகர் ஜாபர், மாணவர் அணி நயினார், இளைஞர் அணி காஜா இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐகிரவுண்டு கடைகளை திறக்க அனுமதி
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகம் எதிரே கடை நடத்தி வரும் வணிகர்கள் அகஸ்டின் பெர்ணான்டஸ், சாமிநாதன் ஆகியோர் தலைமையில் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
சிறு, குறு வியாபாரிகளாகிய நாங்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிராதன நுழைவு வாசலுக்கு எதிரே பல ஆண்டுகளாக கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம். இங்கு நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். கொரோனாவால் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா வார்டுக்கு எதிரே இருப்பதால் மக்கள் நடமாட்டம் இன்றி வியாபாரம் குறைந்து விட்டது.
இந்த நிலையில் எங்களது கடைகளை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே நோயாளிகளுக்கு பொருட்கள் எளிதாக கிடைக்கவும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடைகளை உடனடியாக திறக்க அனுமதி அளிக்க வேண்டும். மாநகராட்சி நடைமுறைகள் மற்றும் போலீசாரின் கட்டுப்பாடுகளின்படியும் சமூக இடைவெளி கடைபிடித்து கிருமி நாசினி தெளித்து வருகிறோம். எனவே எங்கள் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
இதேபோல் டவுன் பாபா தெருவை சேர்ந்த வக்கீல் கலைச்செல்வன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவில், தமிழக அரசு கொரோனா கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். எனவே தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவியை உயர்த்தி ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் புதிய தகரஷீட் கடைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 3 சதவீத கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story