ஊரடங்கு காரணமாக கோவிலில் தரிசனம் செய்ய தடை: உவரியில் கடைகளில் மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்
ஊரடங்கு காரணமாக சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கடைகளில் மொட்டையடித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி செல்கிறார்கள்.
திசையன்விளை,
ஊரடங்கு காரணமாக சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கடைகளில் மொட்டையடித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி செல்கிறார்கள்.
சுயம்புலிங்க சுவாமி கோவில்
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது திசையன்விளை அருகே உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டு உள்ள இந்த கோவிலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 4 மாதங்களாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு விசாக திருவிழாவும் நடைபெறவில்லை.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக முடி காணிக்கை செலுத்துவார்கள். தடை உத்தரவு காரணமாக கோவில் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்கள் பணி செய்யவில்லை. இதனால் முடி காணிக்கை செலுத்துவதாக நேர்த்தி கடன் செய்த பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை உவரியில் உள்ள முடித்திருத்தும் கடைகளில் மொட்டை அடித்து முடியை கடலில் போட்டு நீராடிவிட்டு கோவில் முன்பு நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
கடலில் நீராடல்
இதேபோல் சிறுவர், சிறுமிகளுக்கு காது குத்துபவர்கள் அங்குள்ள முத்தாரம்மன் கோவில் முன்பு வைத்து குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள். பின்னர் கடலில் நீராடி கோவில் முன்பு நின்று சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story