4 போலீசாருக்கு கொரோனா: சிவகிரி போலீஸ் நிலையம் மூடப்பட்டது
4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிவகிரி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
களக்காடு,
4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிவகிரி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
ஜவுளிக்கடை மூடல்
களக்காடு ஜவஹர் வீதியை சேர்ந்த ஆண் ஒருவர் பழைய பஸ் நிலைய அண்ணா சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அத்துடன் கொரோனா அறிகுறியும் தென்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைதொடர்ந்து அவர் நடத்தி வந்த ஜவுளிக்கடை மூடப்பட்டது. அங்கு பணிபுரிந்த ஊழியர்களும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதுபோல கோட்டை யாதவர் கீழத்தெருவை சேர்ந்த 53 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அபராதம்
இதையடுத்து நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் வேலு, சண்முகம் மற்றும் பணியாளர்கள் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட விஸ்வகர்மா தெரு மூடப்பட்டது. மேலும் நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையில் ஊழியர்கள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றிய 14 பேருக்கு, தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.
சிவகிரி போலீஸ் நிலையம்
தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட 4 போலீசாரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போலீஸ் நிலையம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு மஸ்தூர் பணியாளராக பணியாற்றும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கின்ற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகர பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி ஜவுளிக்கடை
தென்காசியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றிய தொழிலாளர்கள் 14 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த கடையில் வேலை பார்த்த இலஞ்சியை சேர்ந்த ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் கடையை நிர்வாகத்தினர் அடைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனால் கடையில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் நேற்று காலை 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் வசித்து வந்த தென்காசி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தென்காசி கீழப்புலியூர் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெருவின் உள்ளிருந்து வெளியே வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி அவர்களது பெயர், வாகன எண் போன்றவற்றை பதிவு செய்து அனுப்புகிறார்கள். தென்காசி நகரின் பல தெருக்களில் இதுபோன்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தென்காசி நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார ஆய்வாளர்கள் கைலாச சுந்தரம், சிவா, மாரிமுத்து பொன் வேல்ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி நர்மதா தெருவில் ஒரே வீட்டை சேர்ந்த நான்கு பேருக்கு ஏற்கனவே கொரோனா வந்துள்ள நிலையில் அந்த வீட்டை சேர்ந்த 60 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story