நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காய்கறிகள் இறக்குவதற்கு அனுமதி மறுப்பு காவலாளிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காய்கறிகளை இறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவலாளிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காய்கறிகளை இறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவலாளிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காய்கறி மார்க்கெட்
நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மூடப்பட்டது. அந்த மார்க்கெட் தற்காலிகமாக புதிய பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள், காய்கறி வியாபாரிகள், விவசாயிகள் வந்து சென்றதால் குழப்பமும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு மொத்த காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார். ஆனால் புதிய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால், வியாபாரிகள் அங்கிருந்தே வியாபாரத்தை தொடங்கினர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், வியாபாரிகளிடம் மார்க்கெட்டை தற்காலிகமாக ஆம்னி பஸ் நிலைய வளாகம் அல்லது ஜான்ஸ் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
வாக்குவாதம்
ஆனால் வேறு இடத்துக்கு செல்வதை விட தங்களது நயினார்குளம் மொத்த மார்க்கெட் வளாகத்துக்கே செல்ல அனுமதி வழங்குமாறு வியாபாரிகள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையத்துக்கு வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கறி லோடு வந்தது. அதனை பஸ் நிலைய வளாகத்துக்குள் கொண்டு செல்ல மாநகராட்சி காவலாளிகள் எதிர் ப்பு தெரிவித்தனர். உள்ளே லோடு கொண்டு வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.
இதனால் வியாபாரிகளுக்கும், காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம் முறையிட்டனர். அவர் உடனடியாக புதிய பஸ் நிலையத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதை பார்வையிட்டார். பின்னர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினார்.
இதையடுத்து வருகிற 15-ந் தேதிக்கு முன்னதாக மொத்த மார்க்கெட்டை மாநகராட்சி சுட்டிக்காட்டும் இடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை புதிய பஸ் நிலையத்தில் மொத்த காய்கறி மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலைய வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story