கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன்? சித்தராமையா கேள்வி


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன்? சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 7 July 2020 4:00 AM IST (Updated: 7 July 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன் என்று கர்நாடக அரசுக்கு, சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன் என்று கர்நாடக அரசுக்கு, சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது

கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் அடிக்கடி கூறுகிறார்கள். குறைந்தபட்சம் மாதிரிக்காவது, சிகிச்சை அளிக்க மறுக்கும் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் மீது இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?. இந்த அரசு நடவடிக்கை எடுக்க பயப்படுவது ஏன்?.

கொரோனா பரவலை தடுக்க இருக்கும் ஒரே வழி, பரிசோதனையை அதிகரிப்பது தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறி வருகிறது. ஆனால் கர்நாடக அரசுக்கு, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை. கர்நாடகத்தில் 59 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தேவையான வசதிகள்

இந்த ஆய்வகங்கள் மூலம் தினசரி 31 ஆயிரத்து 116 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். தற்போது பரிசோதனை நடப்பது சராசரியாக 13 ஆயிரத்து 910 மட்டுமே. அப்படி என்றால் மொத்த திறனில் 44.7 சதவீதம் அளவுக்கு மட்டுமே இந்த அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசின் அலட்சியத்திற்கு வேறு சாட்சி வேண்டுமா?.

கொரோனா பரிசோதனையை அதிகரித்தால், வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது அதே அளவுக்கு சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்பதால், இந்த அரசு பரிசோதனையை அதிகரிக்காமல் உள்ளது. மக்களின் சாவுக்கு காரணமான அரசை, கொலை செய்யும் அரசு என்று அழைத்தால் என்ன தவறு?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story