புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது ஒரேநாளில் 65 பேருக்கு தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் 65 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் 65 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று
புதுச்சேரியில் கொரோனா தொற்றை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தது. அதன்படி முதல் 50 நாட்கள் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் புதுவை அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை அதிர்ச்சிக்குள்ளானது. இதற்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிய அனுமதியில்லாமல் புதுவைக்குள் நுழையும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாட்டு மண்டலம்
கொரோனா பாதித்த நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பொதுபோக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க கவர்னர் கிரண்பெடி தொற்று நோய் வழக்கு சம்பந்தமான பதிவுகளை அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த எண்ணிக்கை 946 ஆக இருந்தது. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
1,009 பேர் பாதிப்பு
புதுவையில் நேற்று 502 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையை சேர்ந்தவர்கள் 62 பேரும், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 36 பேரும், பெண்கள் 29 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 11 பேர், 18 முதல் 60 வயது வரை 46 பேர், 60 வயதுக்கு மேல் 8 பேர் ஆவார்கள்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1,009 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 515 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 480 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 14 பேர் மரணமடைந்துள்ளனர். புதுவையில் இதுவரை 20,778 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 432 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
இத்தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story