கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி நாராயண் ரானே மீண்டும் வலியுறுத்தல்
மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டது. எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என நாராயண் ரானே மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
அதிகாரிகள் நடத்தும் அரசாங்கம்
மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா தலைவருமான நாராயண் ரானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாக மந்திராலயாவில் முதல்-மந்திரி இல்லை. மந்திராலயாவில் முதல்-மந்திரி இல்லாவிட்டால் மாநில அரசு இருக்குமா? உத்தவ் தாக்கரே தனது மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து வெளியே வரவில்லை. பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
அதிகாரிகளால் தான் இந்த அரசாங்கம் நடத்தப்படுகிறது. கொரோனாவால் மும்பையில் மட்டும் 5 ஆயிரம் பேரும், மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர்.
4 மாத ஊரடங்கின் மூலம் உத்தவ் தாக்கரே மராட்டியத்தை 10 வருடங்களுக்கு பின்னோக்கி கொண்டு சென்று விட்டார்.
ஜனாதிபதி ஆட்சி
இதுபோன்ற ஒரு முதல்-மந்திரியை உலகில் எங்கும் காண மாட்டீர்கள். கொரோனாவால் மக்கள் கவலையில் இருக்கிறார்கள். இறப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்த அரசாங்கத்தால் கொரோனா நெருக்கடியை கையாள முடியவில்லை என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன். இந்த அரசாங்கம் மக்களின் நலனுக்கானது அல்ல. எனவே இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மே மாதமும் நாராயண் ரானே மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story