விருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு
விருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
விருத்தாசலம்,
விருத்தகிரீஸ்வரர் கோவில் மெய்க்காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
முன்விரோதம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள 2-வது ராமன் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 45). இவர் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மெய்க்காவலராக பணிபுரிந்து வந்தார். அதே கோவிலில் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்த சங்கர் (58) என்பவர் இரவு காவலராக பணிபுரிந்து வந்தார்.
சங்கர் இரவு நேர பணிக்கு வந்த பிறகுதான், பாலு தன்னுடைய மெய்க்காவலர் பணியை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு செல்ல வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் சங்கர் உரிய நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. இதன் காரணமாக, அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது.
சாவியால் தாக்கினர்
கடந்த 6-5-2017 அன்று இரவு சங்கர் இரவு பணிக்கு வந்தார். அப்போது சங்கருக்கும் பாலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலு தன்னுடைய கையில் வைத்திருந்த சாவியால் சங்கரை தாக்கினார். இதனால் சங்கர் தன்னுடைய மகன் சபரி என்ற சண்முகசுந்தரத்திற்கு (33) போன் செய்து சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து சண்முகசுந்தரம், தனது நண்பர் முத்து ( 30), என்பவருடன் கோவிலுக்கு வந்து, பாலுவிடம் தகராறு செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த சாவியை பிடுங்கி, அவரை தலையில் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பாலுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலு இறந்து விட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கர், சண்முகசுந்தரம், முத்து ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர், சண்முகசுந்தரம், முத்து ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அரசு தரப்பில் மாவட்ட அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story