மது அருந்துவதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நகை பட்டறை உரிமையாளர் கைது
மது அருந்துவதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற நகைப்பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் ஜி.பி.ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த 4-ந் தேதி ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என்று வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் அவர் அங்கிருந்து சென்று விட்டார். மறுநாள் 5-ந் தேதி மீண்டும் அதே ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது. தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.
கைது
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை அவருக்குப்பின் பணம் எடுக்க சென்ற ஒருவர் பார்த்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. அத்துடன் ஏ.டி.எம். மையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற வங்கி கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்தனர்.
அதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 42) என்பதும், நகைப் பட்டறை உரிமையாளரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் மது அருந்துவதற்காக பணமின்றி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கோவையில் நகை பட்டறை உரிமையாளர், மது குடிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story