சேலத்தில் கடந்த 81 நாட்களில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 85,979 பேருக்கு ரூ.72 லட்சம் அபராதம்


சேலத்தில் கடந்த 81 நாட்களில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 85,979 பேருக்கு ரூ.72 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 7 July 2020 4:40 AM IST (Updated: 7 July 2020 4:40 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கடந்த 81 நாட்களில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 85 ஆயிரத்து 979 பேருக்கு ரூ.72 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

சேலத்தில் கடந்த 81 நாட்களில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 85 ஆயிரத்து 979 பேருக்கு ரூ.72 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கண்காணிப்பு குழுவினர்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. முக கவசம் அணியாமல் பொது வெளிகளில் வருகின்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை கண்காணிக்க 4 மண்டலங்களிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அபராதம் வசூல்

அதன்பேரில் கடந்த 81 நாட்களில் இதுவரை சூரமங்கலம் மண்டலத்தில் 21 ஆயிரத்து 744 நபர்களிடம் இருந்து ரூ.16 லட்சத்து 63 ஆயிரத்து 300-ம், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 21 ஆயிரத்து 959 நபர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 94 ஆயிரத்து 955-ம், அம்மாபேட்டை மண்டலத்தில் 21 ஆயிரத்து 663 நபர்களிடம் இருந்து ரூ.19 லட்சத்து 91 ஆயிரத்து 650-ம் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 20 ஆயிரத்து 613 நபர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 26 ஆயிரத்து 200 என மொத்தம் 85 ஆயிரத்து 979 நபர்களிடம் இருந்து ரூ.71 லட்சத்து 76 ஆயிரத்து 105 அபராதம் விதித்து அந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொது வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து கொரோனா நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடைவீதியில் சோதனை

இதனிடையே, அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையாளர் ராம்மோகன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் முருகேசன், வருவாய் ஆய்வாளர்கள் சுரேஷ், குமரவேல் உள்ளிட்ட ஊழியர்கள் நேற்று காலை கடைவீதியில் உள்ள கடைகளில் வியாபாரிகள் முக கவசம் அணிந்து இருக்கிறார்களா? சமூக இடைவெளியை பின்பற்றி வியாபாரம் நடைபெறுகிறதா?என்பது குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கும், கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கும் தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் சென்று சமூக இடைவெளியுடன் வியாபாரம் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story