வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் டி.ஐ.ஜி. காமினி அறிவுறுத்தல்
வழக்கில் தொடர்புடைய நபர்களை நேரடியாக சென்று அழைக்காமல், சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி கூறினார்.
வேலூர்,
வழக்கில் தொடர்புடைய நபர்களை நேரடியாக சென்று அழைக்காமல், சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதிவாணன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமை தாங்கி பேசியதாவது:-
போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுக்களின் மீது முதலில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதன்பின்னரே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்யாமல், அதில் தொடர்புடைய அனைவரையும் தீவிரமாக விசாரித்த பின்னர் கைது செய்ய வேண்டும். மேலும் எந்த பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். வழக்கில் தொடர்புயை நபர்களின் வயது, உடல்நிலையை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும். குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள கூடாது. வேலூர், காட்பாடி, குடியாத்தம் உட்கோட்டங்களில் இதற்காக சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு வைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்.
சம்மன் அனுப்பி அழைக்கலாம்
வழக்கில் தொடர்புயை நபர்களை நேரடியாக சென்று அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அழைக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எரிச்சல் அடையாமல் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டும். பெண்களை கைது செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், வேலூர், காட்பாடி, குடியாத்தம் பகுதிகளை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story