மதுரையில் கொரோனாவுக்கு சிறுமி உள்பட 7 பேர் சாவு மேலும் 245 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் கொரோனாவுக்கு சிறுமி உள்பட 7 பேர் சாவு மேலும் 245 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 7 July 2020 7:30 AM IST (Updated: 7 July 2020 7:30 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவுக்கு சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபோல் நேற்று மேலும் 245 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் திடீரென உயிரிழந்தனர். அவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர்.

மதுரை நகர் பகுதியை சேர்ந்த இந்த சிறுமி கடந்த 28-ந் தேதி கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 30-ந் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் இருந்த அவர் திடீரென உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கொரோனா நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததுடன், ரத்தசோகை நோயும் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சை

இதுபோல் மதுரை பகுதியை சேர்ந்த 58 வயது ஆண், 55 வயது பெண், 76 வயது ஆண் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் இவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதவிர மதுரை பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், 72 வயது முதியவர், 52 வயது ஆண் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் பரிதாபமாக இறந்தனர்.

இதன்மூலம் மதுரையில் ஒரே நாளில் சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது. மதுரையில் உயிரிழந்தவர்களில் மிக குறைந்த வயதுடையவர், மேற்கண்ட சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது.

மேலும் 245 பேர் பாதிப்பு

மதுரையில் நேற்று ஒரே நாளில் 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 33 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதம் உள்ளவர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 20 பேரும் அடங்குவர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், 12 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 68 பேருக்கும் என மொத்தம் 245 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். இதுபோல் 146 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,338 ஆக உயர்ந்துள்ளது. 2,975 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story