திருப்பூரில் பல்பொருள் அங்காடி பெண் ஊழியருக்கு கொரோனா 50 பேருக்கு மருத்துவ பரிசோதனை
திருப்பூரில் பல்பொருள் அங்காடி பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்பொருள் அங்காடி மூடப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்து வரும் 50 பேருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூரில் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடி மற்றும் அதன் உள்ளே காம்பவுண்டிற்குள் ஏராளமான கடைகளும் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பல்பொருள் அங்காடியில் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த பெண் ஊழியருக்கு, உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்து வந்தார். இதன் பின்னர் உடல் நிலை சரியில்லை என்பதால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
50 பேருக்கு பரிசோதனை
இதைத்தொடர்ந்து அவரது வீட்டு அருகே உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்புகள் அமைத்தனர். மேலும், அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
இதற்கிடையே பெண் ஊழியர் பல்பொருள் அங்காடியில் பணியாற்றியதால் நேற்று அந்த பல்பொருள் அங்காடியும் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.
மேலும், 2 வாகனங்களில் அங்கு கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து அந்த பல்பொருள் அங்காடி மற்றும் அதன் அருகே உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பெண் ஊழியரின் குடும்பத்தினர் என மொத்தம் 50 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story