கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 July 2020 11:26 AM IST (Updated: 7 July 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள உழவர் பெருந்தலைவர் விவசாயி நாராயணசாமி நாயுடு சிலைக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் விவசாயிகளுக்காக நடந்த பல்வேறு கட்ட போராட்டங்களின்போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்காச்சோளம், பருத்தி, நெல் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை சட்டப்பூர்வமாக்கி, அதன்படி விளைபொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். கொரோனா பொது முடக்க காலத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட சட்டங்களை மத்திய- மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.

பருத்திகளை மாலையாக அணிந்து

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க அரசு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.33 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளை தட்டி, பருத்திகளை மாலையாக அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி, அரியலூர் மாவட்ட தலைவர் செயலாளர் விஸ்வநாதன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story