பொதுமக்களிடம் எவ்வாறு பழகுவது? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி


பொதுமக்களிடம் எவ்வாறு பழகுவது? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி
x
தினத்தந்தி 7 July 2020 6:07 AM GMT (Updated: 7 July 2020 6:07 AM GMT)

பொதுமக்களிடம் எவ்வாறு பழகுவது? மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

கரூர், 

திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, நேற்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. ஆனிவிஜயா போலீஸ் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் எவ்வாறு பழகுவது என்பது குறித்து கடந்த இரு நாட்களாக போலீசாருக்கு நிர்வாக தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகிறோம். அதாவது பொதுமக்களின் பிரச்சினைகளை எப்படி கையாள்வது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறோம். வழக்கு விசாரணை சம்பந்தமாக மாலை 6 மணிக்கு மேல் பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது. அவ்வாறு அழைத்து வரப்பட்டால் அப்பெண்ணுடன் மகளிர் போலீசார் இருக்க வேண்டும் என போலீசாருக்கு தெளிவுப்படுத்தி வருகிறோம்.

நிரந்தர தீர்வு

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு, சட்டங்களுக்கு உட்பட்டு தான் தீர்வுகாண முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு வருவோரை போலீஸ் நிலையம் மூலம் விசாரித்து, பின்னர் மாவட்ட சமூக நல அமைப்புகள் மூலம் அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண வழிவகை செய்து வருகிறோம்.

குடும்ப பிரச்சினையில் காவல்துறையால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. ஆதிகாலம் முதலே போலீசுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவு பலமாகவே இருந்து வருகிறது. காவிரி ஆற்றுப்படுகைகளில் மணல் திருட்டு புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், கைரேகை நிபுணர்கள் பிரிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆய்வு செய்தார்.

Next Story