மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவதற்காக 70 கி.மீ. தூரம் சைக்கிளில் வந்த 73 வயது முதியவர்
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவதற்காக 73 வயதான முதியவர் 70 கி.மீ. தூரத்தில் உள்ள தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்தார்.
தஞ்சாவூர்,
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. கார், ஆட்டோக்கள் மட்டும் மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு நிவாரணம் அறிவித்து வழங்கி வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு அவரவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.
அடையாள அட்டை
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் அருகே உள்ள ஏனாநல்லூர் வடக்குத்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நடேசன்(வயது 73), தனக்கு நிவாரணம் கேட்டு அதிகாரிகளை அணுகினார்.
அப்போது அதிகாரிகள், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை இருந்தால் தான் நிவாரணம் வழங்க முடியும் என்றும், அடையாள அட்டை பெற தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செல்லுமாறும் கூறினர்.
சைக்கிளில் பயணம்
ஊரடங்கால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த நடேசன், பஸ்கள் இயங்காததால் சைக்கிளிலேயே தஞ்சைக்கு செல்வது என முடிவு செய்தார். அதன்படி ஏனாநல்லூரில் இருந்து 70 கி.மீ. தூரம் சைக்கிளில் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் அந்த முதியவரை கைத்தாங்கலாக கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் கலெக்டர் கோவிந்தராவிடம், தனக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையான அட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதைக்கேட்ட கலெக்டர் உடனடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரியை அழைத்து நடேசனின் கோரிக்கை குறித்து தெரிவித்தார்.
விண்ணப்பம் வழங்கப்பட்டது
இதையடுத்து அதிகாரிகள், அவருக்கு உரிய விண்ணப்பத்தை வழங்கி, அதில் கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரிடம் சான்றிதழ் வாங்கி வாருங்கள். அடையாள அட்டை தருகிறோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் கும்பகோணத்துக்கு மீண்டும் சைக்கிளிலேயே புறப்பட்டு சென்றார்.
நடேசன் தனது சைக்கிளின் முன்பகுதியில் ஒரு சிறிய பை தொங்க விட்டு இருந்தார். அதில், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வைத்து இருந்தார். மேலும் 2 பாட்டில்களில் தண்ணீரும், சைக்கிளின் பின்னால் காற்று அடைக்கும் பம்ப்பும் வைத்து இருந்தார்.
மாடு மிதித்ததால் ஊனம்
இது குறித்து நடேசன் கூறுகையில், “நான் சிறுவயதாக இருக்கும் போது மாடு மிதித்து விட்டதில் எனது கால் ஊனமாகி விட்டது. விவசாயியான நான் சைக்கிளில் சென்று கோலமாவு வியாபாரம் செய்து வருகிறேன். எனது மனைவி இறந்து விட்டார். சுந்தர் என்ற மகன் மட்டும் உள்ளார். நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா நிவாரணம் கேட்ட போது அடையாள அட்டை கேட்டனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தேன்”என்றார்.
Related Tags :
Next Story