கொரோனா நோயாளிகளுக்கு முட்டை, பால், பழங்களுடன் சத்தான உணவு: தளவாய்சுந்தரம் பேட்டி
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு முட்டை, பால், பழங்களுடன் சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று தளவாய்சுந்தரம் கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ அலுவலர்களுடன் கொரோனா நோயாளிகளுக்கு, வழங்கப்பட்டு வரும் உணவுகள், சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது.
ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தளவாய் சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனில் முழுமையான அக்கறை கொண்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, சக மருத்துவர்களுடன் இணைந்து சிறப்பாக கவனித்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல் அவர்களுக்கு தேவையான மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அனைவருக்கும் மருத்துவ வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருவது பாராட்டுக்குரியது.
கொரோனா நோயாளிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஏற்பாட்டின் பேரில், பழங்கள், பழ ஜூஸ், பழ கலவை, கபசுர குடிநீர் ஆகியவை வழக்கமாக வழங்கப்படும் உணவோடு சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு அவசர உணவாக பிரட், பழங்களும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நோயாளிக்கு கால் லிட்டர் வீதம் பாலும், முட்டைகளும் உணவுடன் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உணவு தயாரிப்பதோடு, அதிகமாக 100 நபர்களுக்கு மூன்று வேளையும் கூடுதலாக உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், மாலை நேரங்களில் நோயாளிகளுக்கு சுண்டல், பயிறு வகைகள் மற்றும் பால் வழங்கப்படுகிறது.
நமது ஆஸ்பத்திரியில் 500 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளும், 100 தனிஅறைகள் கொண்ட தனி பிரிவு வார்டும், 60 படுக்கைகள் கொண்ட சிறிய ஆஸ்பத்திரி ஒன்றும் தற்போது தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக மொத்தம் 860 படுக்கைகளாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியோடு சேர்த்து கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவகல்லூரி, தக்கலை அரசு தலைமை ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பராமரிப்பு மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அவசர சிகிச்சை என்றாலும் அதற்கான சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு தேவையான செயற்கை சுவாச கருவிகள் தயாராக உள்ளது.
ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்களில் எஞ்சியுள்ள மீனவர்களை சொந்த மாவட்டத்திற்கு அழைத்து வர முதல்- அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். முதல்-அமைச்சர், பாரத பிரதமர் அவர்களுக்கு இதுகுறித்து, கடிதம் அனுப்பியுள்ளார்கள். ஈரானில் எஞ்சியுள்ள மீனவர்களை சொந்த மாவட்டத்திற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.
மற்ற மாவட்டங்களை காட்டிலும், நமது மாவட்டத்தில்தான் கொரோனாவில் இருந்து குணமான பிறகு முதல் மற்றும் 2-வது பரிசோதனை முடிந்து 10 நாட்களுக்கு மேல் தொற்று அறிகுறி இல்லை என தெரிந்த பின்னரே, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை சத்தாண உணவு, பழ வகைகள், பால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிவதுடன், பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்லவோ, விடுமுறை நாட்களில் உற்றார், உறவினர் வீடுகளுக்கு செல்வதையோ தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கையுறை, முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.
டாக்டர்களால் நோய்க்கு சிகிச்சை அளிக்க மட்டுமே முடியும், பொதுமக்களாகிய நீங்கள் சமூக பொறுப்புடன், தமிழக அரசின் நெறிமுறைகளை கடைபிடித்தால்தான் உங்களையும், குடும்பத்தாரையும், உறவினர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனாவை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பை தாருங்கள்.
இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story