கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மாலதியிடம் தி.மு.க.சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி தலைமையில் கவுதமசிகாமணி எம்.பி., உதயசூரியன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, நகர செயலாளர் சுப்ராயலு ஆகியோர் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் பற்றி விபரங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள், இது வரை எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட வேண்டும். மேலும் கொரோனா தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை தொடர்பான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிற விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்ட நடைபெற்ற அடிக்கல்நாட்டு விழாவிற்கு ஏன் தொகுதி எம்.பி.க்கு அழைப்பு அனுப்பவில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அப்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசாத், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அன்புமணிமாறன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story