தூக்கில் பெண் பிணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
தூக்கில் பிணமாக தொங்கிய பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள ஸ்ரீராமன் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகள் தனலட்சுமி (வயது 42). திருக்களப்பூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில், ஜெய்சங்கர் இறந்துவிட்டார். இதையடுத்து, தனது தாய் வீட்டில் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 4-ந்தேதி மாலை தனலட்சுமி, மேல்புளியங்குடி பெலாந்துறை வாய்க்கால் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தனலட்சுமியை அதே பகுதியை சேர்ந்த 3 பேர் கொலை செய்ததாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வந்தவுடன், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் பிரேதபரிசோதனை அறிக்கையில் தனலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் நேற்று மீண்டும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்கடலூர் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஈழவளவன், மாநில மாணவரணி நீதி வள்ளல், காட்டுமன்னார்கோவில் தொகுதி துணை செயலாளர் வெற்றிவேந்தன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தனலட்சுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்து வந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், தனலட்சுமி சாவு தொடர்பாக எழுந்திரவாணன்குப்பத்தை சேர்ந்த பழனிவேல் (55) என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனலட்சுமியின் உடலை பெற்றுக்கொள்வதாக கூறி, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story