அதிக ஆட்களை வைத்து பணியில் ஈடுபட்ட நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை


அதிக ஆட்களை வைத்து பணியில் ஈடுபட்ட   நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்கு   கலெக்டர் உத்தரவின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 July 2020 10:41 PM GMT (Updated: 2020-07-08T04:11:52+05:30)

நகை பட்டறையில் அதிக ஆட்களை வைத்து பணியில் ஈடுபட்ட உரிமையாளர் மீது கலெக்டர் ராஜாமணி உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை செல்வபுரம் அசோக் நகர் கோவிந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 48). இவர் அதே பகுதியில் சொந்தமாக நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இந்தப் பட்டறையில் அதிகமான ஊழியர்கள் சமூக இடைவெளி இன்றியும், முகக்கவசம் அணியாமலும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் இருந்ததாக தெரிகிறது.

வழக்கு பதிவு

இதற்கிடையே நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நகை பட்டறையில் அதிகளவு ஆட்கள் பணியாற்றியதை கலெக்டர் நேரடியாக பார்த்தார். கொரோனா விதிமுறைகளை மீறியதால் அந்த நகை பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கலெக்டர் ராஜாமணி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் செல்வபுரம் போலீசார் ஆனந்தன் மீது தொற்று நோய் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story