கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வேலை - கோவிந்த் கார்ஜோள் பேட்டி


கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வேலை - கோவிந்த் கார்ஜோள் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2020 4:22 AM IST (Updated: 8 July 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் கொரோனா பரவுவதால், வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். அதனால் கிராமங்களில் அவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு அந்த வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியின தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலை வழங்கப்படும். அவர்களின் விவசாய நிலத்தில் வேலை செய்ய அனுமதி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் அந்த வேலை உறுதி திட்டத்தின் கீழ் 65 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் 15 லட்சம் பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவார்கள்.

இந்த திட்டத்தில் இன்னும் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற மக்களை சேர்த்து வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடின மக்களுக்கு கிராமப்புறங்களில் பசு மாடுகள், எருமை மாடுகளை கடன் அடிப்படையில் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் பால் பண்ணை தொழில் மேற்கொண்டு வருவாயை ஈட்ட முடியும்.

ஹாப்காம்ஸ் கடைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி உள்பட மின் சாதனங்கள் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.

இந்த கூட்டத்தில் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் குமார் நாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story