தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி: 25 ஆயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டன திறக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் இயங்கி வரும் 25 ஆயிரம் நகைபட்டறைகள் மூடப்பட்டன. இதற்கிடையே நகைபட்டறையை திறக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.
கோவை,
கோவையில் கடந்த மாதம் முதல் கொரோானா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை செல்வபுரத்தில் உள்ள நகைபட்டறையில் பணி புரிந்த 34 பேருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள நகை பட்டறைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று கோவை ராஜவீதி, பெரியகடைவீதி, இடையர் வீதி, வைசியாள்வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் நகை பட்டறைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இதில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
வர்த்தகம் பாதிப்பு
கோவையில் தயார் செய்யப்படும் நகைகள் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நகைபட்டறை மூடப்பட்டு உள்ளதால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த நிலையில் மூடப்பட்டுள்ள நகை பட்டறைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாபுஜி சுவாமி, ரமேஷ், சண்முகம், செல்வம், சபரிகிரிஷ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அனுமதிக்க வேண்டும்
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் அரசு அறிவித்தபடி கோவையில் உள்ள சிறு, குறு நகைபட்டறைகள், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் உள்பட அனைவரும் போதிய வருமானம் இன்றி தவித்தோம். தற்போது தான் நகை பட்டறைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் அனைத்து சிறு, சிறு நகை பட்டறைகளை மூடப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து உள்ளனர்.
எனவே சிறு, குறு நகைபட்டறைகளை தகுந்த வழிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story