இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை கலெக்டர் தகவல்
அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-
கோவையில் மாநகராட்சி பகுதியில் தான் தற்போது கொரோனா தொற்று காணப்படுகிறது. புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 360 பேர் வரை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அறிகுறி இன்றி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களும் அடங்கும்.
அதிகரித்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். அறிகுறி இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் கள் கொடிசியா கண்காணிப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
வெண்டிலேட்டர்கள்
தற்போது கொடிசியாவில் 300 படுக்கைகள் உள்ளன. இங்கு 120 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இங்கு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள், பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள், மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா தொற்று பாதிப்பிற்கு ஏற்ப இந்த படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
கோவையில் தற்போது 800 பேர் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 6 பேருக்கு தான் வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்படவில்லை. இருப்பினும் கோவையில் 170 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம்
கோவையை பொறுத்தவரை அறிகுறி இன்றி கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை. ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்வதாக கூறினால், அவர்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதியை ஆய்வு செய்து அனுமதி தரப்படும்.
கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, மதுரை, அரியலூர் உள்பட 9 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மிக முக்கிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து கோவை வந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story